Friday, October 9, 2009

காதல், கடவுள், அழகு,பணம்

என் வேலை உண்டு நான் உண்டுன்னு இருந்தேன்.
குந்தவை என்னை இப்படி இழுத்து விட்டுட்டாங்க....
சரி ஏதோ எனக்கு தெரிஞ்சதை சொல்றேன்.

காதல்

எனக்கு என் குடும்பத்தின் மீது காதல்,
நான் பிறந்த ஊரின் மீதும் என் நாட்டின் மீதும் காதல்

கேஷவ் என்னை கேட்ட கேள்வி நான் ஆடிவிட்டேன்..
நீயும் அம்மாவும் கல்யாணத்துக்கு முன்னாடி லவ் பண்ணீங்களா?


கடவுள்


சிறு வயதில், நண்பர்களுடன் சேர்ந்து ஒரு இடத்தில அமர்ந்து
கண் மூடி உட்காருவேன்.என்னடா என்று யாராவது கேட்டால்,
நான் தவம் இருக்கிறேன்.உம்மாச்சி என் முன்னாடி வரும் என்று சொல்வேன்.
இப்போது நினைத்தாலும் சிரிப்பு வருகிறது.

அவன் அன்றி ஒரு அணுவும் அசயாதுனு நம்புபவன் நான்.
என்ன கஷ்டமானாலும் கோவிலுக்கு போனாலோ,
பூஜை ரூமுக்கு போனாலோ ஒரு நிம்மதி.


அழகு
இந்த உலகில் உள்ள எல்லாமே ஒவ்வொரு விததில் அழகு தான்.

இளஞ்சிவப்பு சூரியன்,
முழு நிலவு,
வானில் மின்னும் நட்சத்திரங்கள்,
இலைகளில் உள்ள பனித்துளிகள்,
பூத்து குலுங்கும் பூக்கள் ,
பச்சைபசேல் வயல் வெளிகள்,
பனி மூடிய மலை சிகரங்கள்
குழந்தைகளின் சிரிப்பும்
மழலை மொழியும் மிக மிக அழகு...


பணம்
எவ்வளவு இருந்தாலும் இன்னும் கொஞ்சம் வேண்டும் என்று
ஏங்க வைக்கும் ஒரு போதை பொருள்.

Thursday, June 4, 2009

கேஷவ்

கேஷவ் எப்போதும் சொல்வது ...

நான் அப்பா செல்லம். அப்பாவை தான் எனக்கு ரொம்ப பிடிக்கும்.
என் மனைவி ஒருநாள் அவனிடம் கேட்டது...
ஏன்டா நீ என் வயிற்றில் தான் பத்து மாசம் இருந்த.
அப்பா செல்லம்னா என்ன அர்த்தம்?
அதற்கு அவன் சொன்ன பதில்...
நான் பத்து மாசமும் யோசிச்சிண்டே இருந்தேன்...
எப்படி நம்ப இந்த வயத்த விட்டு குதிச்சு அப்பா வயத்துக்குள்
போய் உட்கார்றதுனு.. :)


***************************************************************

சர்வம் படம் பார்த்துகொண்டிருந்தோம் , பாதி படத்தில்
கேஷவ்: வீட்டுக்கு போலாம்
நான் : படம் முடியட்டும் போலாம்.
கேஷவ்: நான் கதை சொல்றேன், ஹீரோ கெட்டவனை கொன்னுடுவான்
அது தான் கதை எனக்கே தெரியுமே இதை எதுக்கு பார்க்கனும்...
நான் : ?????


***************************************************************

கேஷவ்: அப்பா என் கூட விளையாடு..

நான் : ஆபீஸ் வேலை இருக்கு,நீ அம்மா கூட விளையாடு.

கேஷவ் : நீ என் கூட விளையாடு. எப்ப பார்த்தாலும்
ஆபீஸ் வேலை எதுக்கு?

நான் : ஆபீஸ் வேலை பண்ணால் தான் சம்பளம் வரும், அப்போ தான்
உனக்கு பொம்மை வாங்க முடியும்.

கேஷவ் : நீ ஒன்னும் வேலை பண்ண வேண்டாம்.நீ என் கூட
இருந்தாலே போதும்.எனக்கு பொம்மையே வேண்டாம்.

எனக்கு என்ன சொல்வதென்று தெரியவில்லை....

***************************************************************

சிங்கப்பூர் வந்த புதிதில் கேஷவ் ஊருக்கு போக வேண்டும் என்று
சொல்லி விட்டான்.எனக்கு சிங்கப்பூர் பிடிக்கவில்லை,
நான் சென்னை போகணும்.

நான் அவனை சமாதான படுத்த முயன்றேன்,அதற்கு அவன்...

நான் அம்மாவை விட்டு இருந்ததே இல்லை,
உனக்கு ஊருக்கு போகணும்,பாட்டி கூட இருக்கணும்னு தோணாதா?

என்ன சொல்வது?

Saturday, May 30, 2009

என்னைப் பற்றி இது வரை தெரியாதவை...

நண்பர் விஜய் என்னைப்பற்றி எழுத அழைத்திருந்தார்...

என்னைப் பற்றின சில கேள்விகளும், அதன் பதில்களும்.....

1.உங்களுக்கு ஏன் இந்தப் பெயர் வந்தது? உங்களுக்கு உங்க பெயர் பிடிக்குமா ?


எனக்கு இந்த பெயரை வைத்தது என் பெரியப்பா.
எனக்கு இந்த பெயர் ரொம்ப பிடிக்கும்.


2. கடைசியாக அழுதது எப்பொழுது?

சினிமாவில் ரொம்ப நெகிழ்ச்சியான காட்சிகள் வந்தாலே என்னை அறியாமல்
அழுதுவிடுவேன். கடைசியாக அழுதது அபியும் நானும் படத்தில்
அபி என் அம்மா சார் என்று குமாரவேல் சொல்லும் காட்சி..இதை படித்து ரொம்ப கண் கலங்கிவிட்டேன்.
3.உங்களோட கையெழுத்து உங்களுக்கு பிடிக்குமா?

என் signature எனக்கு பிடிக்காது அதை மாற்ற முயன்றேன் . டாகுமென்ட்ஸ்,பாஸ்போர்ட்,வங்கி என்று எல்லாவற்றிலும்
அதை உபயோகிதிருப்பதால் அதை மாற்ற சிரமமாக இருக்கிறது.

நான் எழுதும் கைஎழுத்து எனக்கு பிடிக்கும்.


4.பிடித்த மதிய உணவு என்ன?

சாம்பார், உருளைக்கிழங்கு ,தயிர் சாதம்.


5.நீங்கள் வேறு யாருடனாவது உங்களோட நட்பை உடனே வச்சுக்குவீங்களா?

ஆமாம் , ஒருவரை பார்த்து சில நிமிடங்களிலேயே அவருடன்
நட்பாகப் பேச முடியும். அவர் எப்படி பழகுகிறார் என்பதை பொருத்து நட்பு தொடரும்.

6.கடலில் குளிக்க பிடிக்குமா....அருவியில் குளிக்க பிடிக்குமா?

அருவியில். அதைவிட அதிகம் அமைதியான நீர்நிலையில் நீண்ட நேரம்
குளிக்க பிடிக்கும்.7.முதலில் ஒருவரைப் பார்க்கும் போது எதை கவனிப்பீர்கள்?

ஆண்களிடம் மீசை.பெண்களிடம் அவர்கள் தலைமுடி.


8.உங்க கிட்ட உங்களுக்கு பிடிச்ச விஷயம் என்ன? பிடிக்காத விஷயம் என்ன ?

பிடித்த விஷயம் எல்லோரையும் நல்லவர் என்று நம்புவது.
பிடிக்காதது ரொம்ப கோபப்படுவது .ஆனால் அது வந்து பத்து நிமிடங்களில் பறந்துவிடும்.


9.உங்க சரி பாதி கிட்ட உங்களுக்கு பிடித்த பிடிக்காத விசயம் எது?

இது தான் வம்பான கேள்வி, எப்போதும் சமையல் அறையை சுத்த படுத்துவது.
பாத்திரம் தேய்ப்பது.

10.யார் பக்கத்துல இல்லாம இருக்குறதுக்கு வருந்துகிறீர்கள் ?

பாட்டி,எனக்கு வேலை கிடைத்து நான் நன்றாக இருப்பேன் என்று எப்போதும் சொல்வாள்.முதல் வேலை கிடைப்பதற்கு முன்பே போய் சேர்ந்துவிட்டாள்.

என் அப்பா,அம்மா சென்னையில் , நான் இங்கு சிங்கபூரில்.
அதுவும் கஷ்டமாக தான் இருக்கிறது.எனக்கு எப்போதும் அவர்களை
விட்டு இருக்க பிடிக்காது.நான் என் மனைவியை அடிக்கடி கேக்கும் கேள்வி
நீ உன் அப்பா,அம்மாவை விட்டு விட்டு எப்படி கல்யாணம் ஆன
உடனே எங்களோடு வந்து விட்டாய்?


11.இதை எழுதும் போது என்ன வர்ண ஆடை அணிந்து உள்ளீர்கள்?

வெள்ளை ஷார்ட்ஸ் , கருப்பு பனியன்.


12.என்ன பார்த்து//கேட்டுக் கொண்டு இருக்குறீங்க ?

அரை என் முன்னூற்று ஐந்தில் கடவுள். sun tv யில்.

13.வர்ணப் பேனாக்களாக உங்களை மாற்றினால் என்ன வர்ணமாக உங்களுக்கு ஆசை?

பிங்க்.


14.பிடித்த மணம் ?

சாம்பார் / ரசம் கொதிக்கும் போது வரும் மணம். இந்த மணத்தை முகர்ந்தாலே பசி வந்துடும்.மழைக்கு முன்/பின் வரும் மண் வாசமும் பிடிக்கு :)

15.நீங்க அழைக்கப் போகும் பதிவரிடம் உங்களுக்கு பிடித்த விஷயம். அவரை அழைக்கக் காரணம் என்ன ?

ஒருவர் ரொம்ப நகைச்சுவையாக எழுதுவார்,
ஒருவர் ரொம்ப அற்புதமான கதைகள் எழுதுவார்.
ஒருவர் ரொம்ப இயல்பாக எழுதுவார்.
ஒருவர் ரொம்ப கலகலன்னு எழுதுவார்.16.உங்களுக்கு இதை அனுப்பிய பதிவரின் பதிவில் உங்களுக்குப் பிடித்த பதிவு ?

பிரபாகரன் - என் பார்வையில்


17. பிடித்த விளையாட்டு?
கிரிக்கெட்,முன்பு ரோடில் விளையாடுவேன். இப்போது (எல்லாம் தொப்பை உபயம் )
பற்றி நினைத்தாலே மூச்சு வாங்கிகிறது.

Carromboard

Tennis.

18.கண்ணாடி அணிபவரா?
இல்லை.

19.எப்படிப் பட்ட திரைப் படம் பிடிக்கும்?

நகைச்சுவைப் படங்கள் ரொம்ப பிடிக்கும். ரஜினி,கமல் படங்கள் அனைத்தும் பிடிக்கும்.

20.கடைசியாகப் பார்த்த படம்?

அயன்.

21.பிடித்த பருவ காலம் எது?

குளிர் காலம் , அதுவும் அந்த மார்கழி மாதத்தில் இழுத்து போர்த்தி கொண்டு தூங்கும் அதிகாலை தூக்கம் ரொம்ப பிடிக்கும்.

22.என்ன புத்தகம் படித்துக் கொண்டு இருக்கீங்க?

Five point someone.ரொம்ப நாளாக படித்துகொண்டிருக்கிறேன் :(23.உங்கள் டெஸ்க்டொப்ல் இருக்கும் படத்தை எத்தனை நாளுக்கு ஒரு நாள் மாற்றுவீர்கள்?

ரொம்ப போரடித்து விட்டால் மாற்றிவிடுவேன்.

24.பிடித்த சத்தம் ? பிடிக்காத சத்தம்?

அனைத்து இசை மற்றும் இசை கருவிகளில் வரும் இதமான சத்தம்.
காது ஜவ்வு கிழியற மாதிரி சத்தம், சுத்தமாப் பிடிக்காது.


25.வீட்டை விட்டு நீங்கள் சென்ற அதிக பட்ச தொலைவு?

Madrid.


26.உங்களுக்கு ஏதாவது தனித் திறமை இருக்கிறதா?

அருண் ஐஸ் கிரீம் நடத்திய ஐஸ் கிரீம் மேளாவில் பத்தொன்பது
ஐஸ் கிரீம்கள் இருபது நிமிடங்களில் சாப்பிட்டேன். இப்போது முடியாது :(


27.உங்களால் ஏற்றுக் கொள்ள முடியாத ஒரு விஷயம்?

மற்றவர்களை கெடுத்து முன்னுக்கு வருவது.அடுத்தவரை பார்த்து பொறாமை படுவது.
நமக்கு என்ன கிடைக்குமோ அது கண்டிப்பாக கிடைக்கும்.

28.உங்களுக்கு உள்ளே இருக்கும் சாத்தான்?
எனக்கு வரும் கோபம். கோபம் வந்தால், என்ன செய்கிறேன் என்றே தெரியாது.

29.உங்களுக்கு பிடித்த சுற்றுலா தலம்?
போக நினைப்பது, இமய மலை. கொடைக்கானல்.

30.எப்படி இருக்கணும்னு ஆசை?

எதை பற்றியும் கவலை படாமல் ஒரு குழந்தையை போல்.
ஆனால் முடியவில்லை:(


31.கணவன் செய்ய விரும்பும் ஒரே காரியம் ?

கணவனாக செய்ய விரும்புவது....

என்னால் முடிந்த அளவிற்கு அவள் வேலைகளில் பங்கெடுப்பதற்கு.


32.வாழ்வு பற்றி ஒரு வரி சொல்லுங்க?

என்ன தான் முட்டி மோதினாலும், உருண்டு புரண்டாலும் நடப்பது தான்
நடக்கும்.....

டிஸ்கி
**********

விஜயிடம் எனக்கு அவருடன் சில ஒற்றுமைகள் இருப்பதாக எழுதி இருந்தேன்.
அதனால் அவர் பற்றி எழுதிய சிலவற்றை அப்படியே விட்டிருக்கிறேன்.

Saturday, February 7, 2009

பயணிகள்

சமீபத்தில் சென்னை வந்த போது விமானத்தில் சில பயணிகள்
நடந்துகொண்ட விதம் பற்றி தான் இந்த பதிவு....

சிங்கபூரில் இருந்து சென்னைக்கு ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம்
ஏறினேன் (பட்ஜெட் ஏர்லைன்..) எனக்கு பின் வந்தார்கள்
நான்கைந்து பேர்.பார்பதற்கு மாணவர்கள் போல் இருந்தனர்.
ஏறியவுடன் அதில் ஒருவர் டேய் மச்சி இங்க பாருடா இந்த சீட்
நம்பர் அழிஞ்சு போச்சு பேனால எழுதி இருக்காங்கடா என்று சொல்ல
மற்றவர்கள் விழுந்து விழுந்து சிரித்தனர். அடுத்து சிறிது நேரத்தில் ஒருவர்,
டேய் சீட் புஷ்பாக் வேலை செய்யலடா என்று சொல்ல, மற்றவர் ,
டேய் அதுக்கு தான் நாம எப்பவும் போகும்(??)
சிங்கப்பூர் ஏர்லைன்ஸில் போக வேண்டும் என்று சொன்னேன்
நீ கேட்கவில்லை.

இன்னும் கொஞ்ச நேரம் கழித்து உணவு கொடுத்தனர்.
அதில் ஜீரா ரைஸ்,சப்ஜி ,கேக், ஜூஸ் இருந்தது அதை பார்த்து
இது என்ன ? இதே வேற ஏர்லைன்ஸில் உணவு வேறு மாதிரி இருக்கும்.
இப்படியே ஏதோ பேசிக்கொண்டே வந்தனர். சென்னை வந்து இறங்கினோம் .
விமானத்தை விட்டு இறங்கி உள்ளே நுழைந்ததும் தரையில் உடைந்து
இருந்த ஒரு டைல்ஸை பார்த்ததும் ஒருவர். டேய் மாமா, இங்க பாருடா
இந்த டைல்ஸ் உடைஞ்சு இருக்கு இதே சாங்கி ஏர்போர்ட் எப்படி இருந்தது
என்று சொல்ல மீண்டும் சிரிப்பு.

இதன் பின் நடந்தது ரொம்ப காமெடி. அதில் ஒருவர். டேய் arrival card
fill பண்ணிட்டியா என்று கேட்க மற்றவர் அனைவரும் டேய் அது
வெளிநாட்டுகாரங்களுக்கு தான் நமிக்கில்லை என்று சொன்னதும் எனக்கு
ஒரு விஷயம் புரிந்து விட்டது, நான் சிரித்துக்கொண்டேன்,
எனக்கு பின்னால் இருந்தவர் கேட்டு விட்டார். ஏம்பா தம்பிங்களா
இது தான் உங்களுக்கு முதல் வெளிநாட்டு பயணமா?
அதுக்கே இவ்வளோ பேச்சா என்று கேட்க அவ்வளவு நேரம்
சிரித்துக்கொண்டு வந்தவர்களின் முகத்தில் ஈ ஆடவில்லை.

நான் சொல்ல வருவது.. நம் விமானங்கள்/ விமான நிலையம்
உலக தரம் இல்லாமல் இருக்கலாம். இன்னும் நிறைய முன்னேற
வேண்டி இருக்கலாம்.அதற்காக பொது இடத்தில் இப்படி பேச வேண்டுமா?
அவ்வளவு எதிர்பார்கிறவர்கள் 1000 டாலர்கள் கொடுத்து
சிங்கப்பூர் ஏர்லைன்ஸில் வந்து இருக்கலாம் எதற்காக
பட்ஜெட் ஏர்லைன்ஸில் வரவேண்டும்? இன்னும் ஒரு விஷயம்
சொல்ல வேண்டும்.இங்கிருந்து செல்லும் டைகர் ஏர்லைன்ஸில்
luggage கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டும்.
உணவும் கிடையாது..

நாம் எப்போதும் குறைகளையே பார்பதை விட அதில் இருக்கும்
ஒரு சில நல்ல விஷயங்களையும் பார்ப்போம்...

Saturday, January 17, 2009

வழக்கொழிந்த சொற்கள்

திருவாளர் விஜய் என்னை வழக்கொழிந்த சொற்கள் பற்றி எழுத சொல்லி இருக்கிறார்..
என்ன விஜய் , என்னை போய் ஹிஹி ...
வழக்கொழிந்த சொற்கள்... என்னவோ போங்க ,

நான் கேள்விப்பட்ட ஒன்னு ரெண்டு சொற்கள் இருக்கு..

சுளுந்து- சுள்ளி, காய்ந்த இலைகள் முதலியவற்றால் ஆன தீப்பந்தம்
(முன்பு ஒரு முறை நண்பர் ஒருவர் சொன்னார்)

ஆக பெரிய - இருப்பதிலேயே பெரிய ...
(இது சிங்கப்பூர் நியூஸ் சானல்களில் வருவது..
பின்னர் தான் தெரிந்து கொண்டேன் இது தமிழ்நாட்டில் புழக்கத்தில்
ஒரு காலத்தில் இருந்தது என்று...)

சென்னை தமிழில் முன்பு நிறைய கேள்வி பட்ட சொல்...
இப்பொழுது இருக்கிறதா என்று தெரிய வில்லை...


கஸ்மாலம் - அர்த்தம் எல்லாம் கேட்க கூடாது ரொம்ப தப்பு :-)நான் இதை பற்றி மேலும் எழுத அழைப்பது மூவரை
(அட மூவரை என்பதே வழக்கொழிந்த சொல் போல தான் இருக்கிறது :)

1) தாரணிப்ரியா

2) திவ்யப்ரியா

3) Mayvee

Sunday, January 11, 2009

அபியும் நானும்

ஒரு பாசமுள்ள அப்பா தன் பெண்ணிடம் உள்ள அபரிமிதமான
பாசத்தினால் படு(த்து)ம் பாடு தான் கதை. பிரகாஷ்ராஜ் ரொம்ப
இயல்பாக நடித்திருக்கிறார்.முதலில் வரும் அந்த ஊஞ்சல் காட்சி
குழந்தை நிறுத்தாமல் ஆட்டு என்று சொல்வதும் அதற்கு
ப்ரித்விராஜ் என்னால் முடியாது நீ சறுக்குமரம் விளையாடு என்று
சொல்வதும் நான் அடிக்கடி அனுபவிப்பது :)

ஐஸ்வர்யா தன் மகளை ஸ்கூலில் சேர்க்க வேண்டும்
என்று சொல்வதும் மூன்று வயதே ஆன குழந்தையை
ஸ்கூலில் சேர்பதா என்று பிரகாஷ்ராஜ் செய்யும் அலப்பரையும்
கேஷவை ஸ்கூல் சேர்க்க வேண்டும் என்று என் பெற்றோரும்
மனைவியும் சொன்ன போது நான் போட்ட கூச்சலை
நினைவு படுத்துகிறது :)

வெந்நீர் கையில் கொட்டிவிட்டது என்று குழந்தை அழ ,
என்ன ஏது என்று விசாரிக்காமல், குழந்தை கையில்தான்
கொட்டிவிட்டது என்று நினைத்து தன் மனைவியை(ஐஸ்வர்யா)
அறைவதும், பின்னர் வெந்நீர் கொட்டியது
ஐஸ்வர்யா கையில் என்று தெரிந்ததும் வழிவது என்று
பிரகாஷ்ராஜ் பின்னிவிட்டார்.

குழந்தை ஒரு பிச்சைகாரரை கூட்டி வருவதும் அவருக்கு
பெயர் வைக்கும் காட்சிகளும் நமக்கு சிரிப்பு வரவழைக்கின்றது..
அந்த பிச்சைகாரர்(குமரவேலு) தன் வீட்டில் வேலைக்கு சேர்ந்து
பின்னர் ஏதோ பார்டிக்கு போகும் போது அவரும் ஹோட்டலுக்கு
வரவேண்டும் என்று குழந்தை சொல்வதும் பின்னர் அங்கு
சாப்பிடும் போது அவர் முதல் முறை ஹோட்டலுக்கு
உள்ளே சாப்பிடுகிறேன் என்று சொல்வதும்,
அபி என் அம்மா சார் என்று சொல்லும் போது
நான் அழுதேவிட்டேன் :(

த்ரிஷா சைக்கிள் ஓட்டும் போது பிரகாஷ்ராஜ் பின்னாலேயே
செல்வதும் ,சைக்கிளை நிறுத்தி த்ரிஷா அவரிடம் வீட்டு
செல்லுமாறு சொல்லிவிட்டு அப்பா I know what iam doing
என்று சொல்லும்போது, நாம் எல்லோரும் நம்
அப்பா அம்மாவிடம் எதற்காவது இதே போல்
சொல்லியிருப்போம் என்று தோன்றுகிறது....

தான் காதலிப்பது பிரகாஷ்ராஜிற்கு தெரிந்த பிறகு ,
மற்றொரு சமயம் த்ரிஷா மீண்டும் அப்பா I Know ..
என்று சொல்ல வருவதும் அதற்கு பிரகாஷ்ராஜ்
தெரியும் அபி, I know what i am doing ன்னு
சொல்ல போற , இதை நீ 16 இருக்கும்போதே
சொல்லிட்ட என்று சொல்லும் காட்சி நெகிழ்ச்சி.

த்ரிஷா ஒரு சர்தார்ஜியை காதலிப்பது தெரிந்ததும்
பிரகாஷ்ராஜ் reaction அட்டகாசம். தலைவாசல் விஜய்
பிரகாஷ்ராஜிடம் தான் ஒருமுறை டெல்லி
போயிருந்ததாகவும் அப்போது சர்தார்ஜி டாக்சியில் போய்
அவரையே கிண்டல் செய்ததும் பின்னர் அந்த டாக்சி டிரைவர்
ஒரு ரூபாயை கொடுத்து நீங்கள் பார்க்கும் முதல் சர்தார்ஜி
பிச்சைகாரரிடம் போடுங்கள் என்று சொன்னதும் அந்த
ஒரு ரூபாய் இன்னும் தன்னிடமே இருப்பதாக சொல்கிறார்.
நாம் சர்தார்ஜிகளை கிண்டல் செய்கிறோமே தவிர அவர்கள்
என்றுமே பிச்சை எடுப்பதில்லை என்று சொன்ன விதம் சூபர்.
சர்தார்ஜி மாப்பிள்ளைக்கு(Independent Journalist and Economist?)
பிரதமரிடம் இருந்து போன் வருவதெல்லாம் கொஞ்சம் ஓவர்.

த்ரிஷாவின் திருமணத்திற்கு முன் பிரகாஷ்ராஜ் மனைவி
ஐஸ்வர்யாவிடம் நம் காதல் கல்யாணத்திற்கு பின் என்னோடு
வந்து விட்டாய்,நான் சொன்னதால் உன் பெற்றோரையே விட்டுவிட்டாய்
அவர்கள் மனம் எவ்வளவு பாடு பட்டிருக்கும்
என்று சொல்வது very touching...

நம்பினால் நம்புங்கள் நான் பல முறை ஊருக்கு போகும் முன்
என் மனைவியிடம் என்னால் கேஷவை விட்டு இருக்க முடியவில்லை,
அவனுக்கும் என்னை விட்டு இருக்க முடியவில்லை, நீ எப்படி
கல்யாணம் ஆன புதிதில் உன் அப்பா அம்மாவை விட்டு இருந்திருக்கிறாய்
என்று கேட்டு இருக்கிறேன்(என்னுடையது காதல் திருமணம் இல்லை )

நான் இந்த படத்தை இன்னும் சில முறை பார்ப்பேன்..

Thursday, January 1, 2009

புத்தாண்டு வாழ்த்துக்கள்...

அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்...

கொஞ்ச நாளா வேலை ஜாஸ்தி அதான் எழுத
முடிவதில்லைனு சொல்லி வந்தாலும்
இன்னொரு காரணம்...
சட்டில இருந்தா தானே அகப்பைல வரும் :)


கடந்த ஒரு வாரமாக சென்னையில்...

கேஷவ் என்னை ஏர்போர்டில் பார்த்ததும் ஒன்றும் பேசவில்லை...
கொஞ்ச நேரம் கழித்து காரில் சொன்னான் எனக்கு உன்னை
பார்த்ததும் ரொம்ப சந்தோஷமா இருக்கு அதான் வெட்கம்...
எனக்கு அவனை பார்த்ததும் சொர்கதிற்கே போனது போல்
உணர்ந்தேன்...

கேஷவ் என்னை ஒரு வாரமாக என்னை எங்கேயும்
போக விடவில்லை, நான் உனக்காக காத்துண்டிருந்தேன்
இப்போ தான் எனக்கு ரொம்ப சந்தோஷம்.
இரண்டு நாட்கள் மைசூர் போயிருந்தோம்,
அங்கே அவனுக்கு ஒரு துப்பாக்கி பொம்மை வாங்கி தந்தேன்...
அதை என்னை பார்த்து அவன் சுட, அதில் இருந்த
குச்சி என் மேல் பட்டது , நான் இன்னொரு முறை
சுட்டால் அந்த பொம்மையை தூக்கி வீசிடுவேன்
என்று சொல்ல , அதற்கு அவன் சொன்ன பதில்,
அம்பு தானே உன் மேல் பட்டது,
எதற்கு நீ துப்பாக்கியை தூக்கி போடுவேன்னு சொல்ற..
இதை கேட்டதும் எனக்கு நாம் அடிக்கடி
எங்கோ இருக்கும் கோபத்தை இனி
வீட்டில் காட்ட கூடாது என்று
புத்தாண்டிற்கான தீர்மானமாக
முடிவெடுத்து விட்டேன்...

மேல்கோட்டை நரசிம்மர் கோவிலுக்கு போயிருந்தோம்...
ரொம்ப நல்ல தரிசனம்...அங்கு நிறைய குரங்குகள்...
நான் கையில் ஒரு கம்போடு தான் போனேன்..
போகும் வழியில் ஒரு சிறுவன் கையில்
லட்டு வைத்து கொண்டு குரங்கிடம்
காண்பித்து ஏமாற்றினான்.. நான் அவனை
பார்த்து சொன்னேன், இப்போ நீ சும்மா இல்லன்னா
அது வந்து உன்னை கடிக்கும்.. அவன் நான்
சொன்னதை கேட்கவில்லை,
மீண்டும் ஒரு முறை அவனை நான் திட்ட,
அதற்கு அவன் கன்னடத்தில் சொன்னது
(எந்த பாஷையில் என்னை திட்டினாலும் புரியும்)
நான் குரங்கை தானே ஏமாற்றுகிறேன்,
உனக்கு என்ன வந்தது?

என் இரண்டாவது தீர்மானம்:
எப்போதும் மற்றவர் விஷயத்தில் தலையிட கூடாது...